
இந்தோனேஷியாவின் உதவியில் கட்டப்பட்ட மற்றொரு பெரிய மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்துள்ளது. இங்கு 600 நோயாளிகள், 200 சுகாதார பணியாளர்கள், தஞ்சமடைந்த 2000 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மருத்துவமனையை சுற்றி இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் நேற்று ஹமாஸ் படையினருடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டது. இது குறித்து மருத்துவமனை ஊழியர் மர்வான் அப்துல்லா கூறுகையில், ‘‘சாலையில் இஸ்ரேல் பீரங்கிகள் செல்வது ஜன்னல் வழியாக பார்க்க முடிகிறது.
இந்த மருத்துவமனையையும் இஸ்ரேல் முற்றுகையிட்டு, அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுமோ என நோயாளிகளிலும், குழந்தைகளும் அஞ்சி உள்ளனர். தொடர்ந்து குண்டு சத்தங்கள், துப்பாக்கி சூடு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது’’ என்றார். இந்த மருத்துவமனையை சுற்றி நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கிய இப்போரில் இதுவரை காசாவில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது.