
ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. ராஜஸ்தானில் கடைசிகட்ட தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இறங்குவதால், தேர்தல் களம் பரபரப்படைந்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 25-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் ராஜஸ்தானில், காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
200 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட ராஜஸ்தானில், அதிகாரத்தில் இருக்கும் காங்கிரஸுக்கும், மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. மத்திய அரசின் திட்டங்களை முன்வைத்து பா.ஜ.க-வும், தனது ஏழு முக்கிய வாக்குறுதிகளை முன்வைத்து காங்கிரஸும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.