
ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியினர் ஒருவருக்கொருவர் தங்கள் அணியினரையே ரன் அவுட் செய்ய முயல்வதாக பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். ராஜஸ்தானின் 200 பேரவை தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பாஜவும் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் இருகட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தாரா நகர் தொகுதியின் பாஜ வேட்பாளர் ராஜேந்திர ரத்தோரை ஆதரித்து சுரு மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ராஜஸ்தான் காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசலை கிண்டல் செய்து பேசினார். பிரதமர் மோடி பேசும்போது, “கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியினர் தங்கள் அணிக்காக ரன்களை அடிக்கின்றனர். அவரை எதிரணி ரன் அவுட் செய்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய உட்பூசல்கள் உள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் ரன்களை அடிப்பதற்கு பதில், தங்கள் அணியினரை ஒருவருக்கொருவர் ரன் அவுட் செய்ய 5 ஆண்டுகளாக காத்து கொண்டுள்ளனர். காங்கிரசும், வளர்ச்சியும் ஒருவருக்கொருவர் எதிரிகள். நல்ல நோக்கங்களுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான உறவு வௌிச்சத்துக்கும், இருளுக்கும் இடையேயான உறவை போன்றது. குடிநீருக்காக பணத்தை கொள்ளையடிக்கும் அரசு எப்படி நல்ல நோக்கம் உடையதாக இருக்கும். ராஜஸ்தானில் பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை தூக்கி எறிந்து விடும். இந்தியா அனைத்து துறைகளிலும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ராஜஸ்தானில் பாஜ ஆட்சி அமைந்தால் மாநிலம் விரைவான வளர்ச்சி அடையும். ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு பாஜவுக்கு வாக்களியுங்கள்” என்று இவ்வாறு தெரிவித்தார்.