
அத்திப்பழத்தின் தனித்துவமான பண்புகளில் ஒன்று, நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதுதான். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு நார்ச்சத்து முக்கியமானது. தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி புரியும். அதனால் செரிமானம் மேம்படும். இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து கழிவுப்பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அவை குடல் வழியாக விரைவாக வெளியேற உதவும். அத்திப்பழத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுவதற்கும், உடலில் தீங்கு விளைவிக்கும் ஃபிரீ ரேடிக்கல்களை கட்டுப்படுத்துவதற்கும் உதவி புரியும். இந்த ஆன்டி ஆக்சிடென்டுகளில் கிவெர்செடின், கேடசின்கள் மற்றும் அந்தோசயின்கள் போன்ற பாலிபினால்கள் அடங்கும். இவை இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.