
காந்திநகர் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த, 125 மதுபாட்டில்கள், 15 டேபிள் ஃபேன் உட்பட, 1.97 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள பகோர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் மற்றும் மின்விசிறிகள் பெண்கள் லாக்கப்பில் வைக்கப்பட்டிருந்தன. “டேபிள் ஃபேன் பெட்டிகளில் வெளிநாட்டு மதுபானங்களை கடத்த முயன்ற நபரிடம் இருந்து 482 மதுபாட்டில்கள் மற்றும் 75 டேபிள் ஃபேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்டோர் ரூம் நிரம்பியதால், பெண்கள் லாக்கரில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதால், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பதிவேடு வழங்கவும், காவல் நிலையத்தை சுத்தம் செய்யவும் அதிகாரிகளிடம் கூறப்பட்டது. லாக்கப்பை சுத்தம் செய்யும் போது, மது பாட்டில்கள் மற்றும் மின்விசிறிகளின் வெற்று அல்லது உடைந்த பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன” என்று டிஎஸ்பி பிஎஸ் வல்வி கூறினார்.