
உலக கோப்பை இறுதிப் போட்டியை காண முன்னாள் கேப்டன் கபில் தேவிற்கு அழைப்பு விடுக்காததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காண வருமாறு பல்வேறு பிரபலங்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்தியாவிற்கு முதல் உலக கோப்பையை பெற்று தந்த தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கபில் தேவ் குற்றம் சாட்டி இருந்தார். 1983ல் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுடனும் அகமதாபாத் மைதானத்திற்கு செல்ல விரும்பியதாகவும் கபில் தேவ் கூறியிருந்தார்.
நிறைய வேலைகளுக்கு மத்தியில் பிசிசிஐ நிர்வாகம் தனக்கு அழைப்பு விடுக்க மறந்திருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு கபில் தேவை அழைக்காதது அற்பத்தனமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். மேலும் தனது மனதில் பட்டதைப் பேசக்கூடியவர் கபில் தேவ் என கூறிய ஜெயராம் ரமேஷ், சில மாதங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கபில் தேவ் கருத்து தெரிவித்திருந்ததையும் நினைவுக் கூறினார்.