
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 106வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடமான ‘சக்தி ஸ்தல்’ சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், சப்தர்ஜங் சாலையில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் அவரது வாழ்க்கையை குறிப்பிடும் புகைப்பட கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சியில் சோனியா பங்கேற்றார். இதுபற்றி, ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவுக்கு அவர் பிரதமர். மக்கள் தலைவர். எனக்கு அவர் பாட்டி மற்றும் ஆசிரியர். நாட்டுக்கான அர்ப்பணிப்பு என்ற வகையில் அவர் கற்றுத்தந்த மதிப்பீடுகள் எனது சிந்தனையை வலுவாக்கி, வழி நடத்துகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.