
ம.பி. சட்ட பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 76.22 % வாக்குகள் பதிவாகியுள்ளது. 230 உறுப்பினர் கொண்ட ம.பி. பேரவைக்கு நேற்றுமுன்தினம் தேர்தல் நடந்தது. கடந்த 1956ல் ம.பி. மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்களில் இப்போதுதான் அதிகளவாக 76.22 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2018 தேர்தலில் 75.63 % பதிவானது. கடந்த தேர்தலை விட தற்போது 0.59% அதிகம் பதிவாகியுள்ளது. 2003க்கு பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு பதிவு அதிகரித்து வருகிறது. 2003 தேர்தலில், 67.25 %, 2008ல் 69.78%, 2013ல் 72.13%, 2018ல் 75.63% பதிவாகியுள்ளது.
2003க்கு பின் நடந்த தேர்தல்களில் பாஜ மூன்று முறையும் காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளது. சட்டீஸ்கரில் குறைந்தது: காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சட்டீஸ்கர் பேரவைக்கு முதல் கட்டமாக 20 தொகுதிகளிலும் 2ம் கட்டமாக 70 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது. சட்டீஸ்கர் பேரவை தேர்தலில் மொத்தம் 76.31 % வாக்கு பதிவாகியுள்ளது. இது கடந்த 2018 தேர்தலை விட சற்று குறைவு. 2018ல் 76.88% பதிவானது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘‘ நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 78 %, 2ம் கட்ட தேர்தலில் 75.88 % பதிவாகியுள்ளது’’ என்றனர்.