
கனடாவில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.82 கோடி பேர் வசிக்கின்றனர். இதில், 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் சீக்கியர்களாவர். இவர்கள் அந்நாட்டின் தொழில், வர்த்தகம் மற்றும் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 19 இந்திய வம்சாவளியினரில், 15 பேர் ட்ரூடோவின் லிபரல் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்களில் 4 சீக்கியர்கள் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நான்கு முக்கிய துறைகளின் அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியை நடத்தி செல்ல இவர்களின் தயவு தேவை என்பதால் ஜஸ்டின் ட்ரூடோ கண்மூடித்தனமாக காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அவரது சொந்த கட்சிக்குள்ளும் மக்களிடையேயும் தீயாக பரவி உள்ளது.
மேற்கூறிய காரணங்களால் மட்டுமின்றி, சமீப காலமாக கனடாவில் வீட்டு வாடகை செலவுகள் தொடர்ந்து அதிகரிப்பதாலும் பணவீக்கம் குறைவதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பதாலும், வழக்கம் போல் நடக்கும் உள்கட்சி தேர்தலில் ட்ரூடோவின் செல்வாக்கு ஒவ்வொரு முறையும் அதிரடியாக சரிந்து வருகிறது. இதன் இறுதி கட்டமாக, கடைசியாக நடந்த கட்சி தேர்தலில் அவர் கட்சியில் நீடித்தால் அடுத்த தேர்தலில் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் சூழல் இருப்பதாகவும் அதனால் பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகும்படியும் சொந்த கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்த துவங்கியுள்ளனர்.