
மேடக் மாவட்டம், நர்சாபூரில் முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர் அமரும் பகுதியில் துப்பாக்கி தோட்டாக்களுடன் ஒருவர் அமர்ந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அந்த நபரிடம் 2 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன.
தீவிர விசாரணையில் அவர், சங்கரெட்டி மாவட்டம் ராய்கோட்டையை சேர்ந்த அஸ்லாம் என்பது தெரிந்தது. இறைச்சி கடை தொழிலாளியான இவர், யூடியூப் சேனல் நடத்துவதாக கூறி போலி ஐ.டி.கார்டுடன் முதல்வரின் பிரசார கூட்டத்திற்கு செய்தியாளர் பகுதிக்கு வந்ததும் ெதரிந்தது. உடனடியாக அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அஸ்லாமிடம் மேடக் மாவட்ட எஸ்பி ரோகினி பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.