
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மகனும் வருணா தொகுதி எம்.எல்.ஏவுமான யதீந்திரா மைசூரு மாவட்டம் கீலனபுராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கிருந்து கொண்டு அவரது தந்தையும் முதல்வருமான சித்தராமையாவிடம் செல்போனில் பேசினார். அப்போது, நான் கொடுத்த பட்டியலில் உள்ள 5 பேருக்கு மட்டும் கொடுங்கள் என்று கூறினார். என்ன விவகாரம் குறித்து பேசினார்கள் என்று தெளிவாக தெரியவில்லை என்றபோதிலும், பணியிட மாற்றத்தை பற்றித்தான் பேசினார் என்று எதிர்க்கட்சிகள் உறுதியாக நம்புவதால், கடுமையாக விமர்சித்துவருகின்றன.
இந்நிலையில், யதீந்திராவின் வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டு இதுதொடர்பாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் குமாரசாமி, யதீந்திரா முதல்வரை மிரட்டுகிறார். யதீந்திரா முதல்வரின் மகனா? அல்லது அவர் தான் கர்நாடகாவின் சூப்பர் முதல்வரா? முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மாநில பாஜ பதிவிட்ட டிவிட்டில், சித்தராமையா சும்மா தான் இருக்கிறார். அதிகாரம் முழுக்க அவரது மகன் யதீந்திராவிடம் உள்ளது என்று விமர்சித்துள்ளது.