
உத்தரகாண்டில் சுரங்க மீட்பு பணியில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புதிய கனரக துளையிடும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி தொடர்கிறது. உத்தரகாண்டில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்கியாரா- தண்டல்கான் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின் போது அதன் ஒரு பகுதி எதிர்பாராதவிதமாக திடீரென சரிந்தது. இதில், வேலை செய்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களுக்கு தேவையான ஆக்சிஜன், குடிநீர், உணவு, மருந்து, மின்சாரம் தொடர்ந்து வினியோகிக்கப்படுகிறது. இவர்களை மீட்க அதிநவீன துளையிடும் இயந்திரங்கள் உதவியுடன் மெல்லிய ஸ்டீல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது.
இந்நிலையில் 4வது நாளாக நேற்றும் மீட்பு பணி தொடர்ந்தது. இதன் போது, சுரங்கத்தினுள் மண் சரிவதாலும், துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினாலும் தப்பிக்கும் சுரங்கம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மண் சரிவில் சிக்கிய மீட்பு படையினர் இருவர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.