
ஹமாஸ் தீவிரவாதிகளின் இருப்பிடங்களில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வரும்நிலையில், காசாவின் மருத்துவமனைகளில் பதுங்கியிருந்த ஹமாஸ் தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் வேட்டையாடி வருகின்றனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த நாடாளுமன்ற கட்டிடத்தையும், இஸ்ரேல் ராணுவத்தினர் கைப்பற்றி உள்ளே புகுந்தனர். காசாவின் வடபகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து முக்கிய பகுதிகளும் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இந்த நிலையில் பிணைய கைதிகள் அடைத்து வைத்திருப்பதாக கூறப்படும் அல்-ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நுழைந்தது.
அவர்களை எதிர்த்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினரை சுட்டுத் தள்ளினர். மருத்துவமனையில் குறிப்பிட்ட பகுதியில் புகுந்துள்ள இஸ்ரேல் படைகள், துல்லிய தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல் படைகளில் மருத்துவக் குழுக்கள் மற்றும் அரபு மொழி பேசுபவர்கள் உள்ளதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருப்பவர்களை அடையாளம் கண்டு மீட்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.