
கேரளாவில் மரணமடைந்த சில அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பத்தினருக்கு கேரள முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து முறைகேடாக நிவாரண நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 6 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பு எதிராக அமைந்தால் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்படும் என கூறப்பட்டது.இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சிரியக் ஜோசப், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அமைச்சரவையின் முடிவில் தலையிட அதிகாரம் இல்லை என்றும், அரசுப் பணத்தை பயன்படுத்த அமைச்சரவைக்கு அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.