
நடிகர் வடிவேலு பட காமெடி பாணியில் தூய்மை விழிப்புணர்வு பதாகை
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு குப்பை சேகரிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து, துப்புரவு பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், நள்ளிரவில், கட்டட கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்களை, சாலையோரம் மக்கள் வீசி செல்கின்றனர்.
இதையடுத்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த மண்டல மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஐடார் பேட்டை பகுதியில் துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்களின் பெயர், தொலைபேசி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர், நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘வின்னர்’ திரைப்பட நகைச்சுவை பாணியில், “இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது… நானும் வரமாட்டேன்…” எனும் காமெடி பாணியில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘வின்னர்’ படத்தில் வரும் வடிவேலுவின் ‘கைப்புள்ள’ காதாபாத்திரத்தின் படத்துடன், “இங்கு குப்பை கொட்ட நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்” என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. இது அந்த பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.