
சிதம்பரத்தில் கூட்டுறவு சங்க தலைவரை இரும்பு குழாயால் தாக்க முயற்சி செய்த வாலிபர் கைது
சிதம்பரம் உசுப்பூர் சக்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 54). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர் தற்போது கூட்டுறவு சங்கத் தலைவராக உள்ளார். இவருக்கும் காட்டுமன்னார்கோவில் கதிமாமங்குடி கத்திரிமேடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கார்த்தி (33) என்பவருக்கும் பண பரிமாற்றம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் பைபாஸ் சாலையில் உள்ள தனது நண்பரின் கொட்டகையில் ஜெயக்குமார் இருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தி, உடைந்த பீர் பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு ஆபாசமாக பேசினார். இதை ஜெயக்குமார் தட்டிக்கேட்ட கார்த்தி, கொட்டகைக்குள் இருந்த இரும்பு பைப்பை எடுத்து ஜெயக்குமாரை தாக்க முயன்றார். உடனே அங்கிருந்தவர்கள் இதை தடுத்து நிறுத்தினர். இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசில் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.