
ஈரோட்டில் ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 அதிகரிப்பு
தங்கம் விலை, ஏற்றம் இறக்கத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோட்டில் கடந்த 9-ந் தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 205-க்கு விற்பனையானது. படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 335-க்கு விற்றது. ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 680-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை வேகம் எடுத்து ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்தது. இதனால் ஒரு பவுனுக்கு ரூ.720 உயர்ந்தது. இதன்படி ஒரு கிராம் 5 ஆயிரத்து 325-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுபற்றி ஈரோடு நகைக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், ராதா ஜுவல்லரி உரிமையாளருமான செல்வம் என்கிற சி.பழனிச்சாமி கூறும்போது, “10 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு பவுனுக்கு ரூ.720 உயர்ந்து இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. அமெரிக்காவில் ஒரு வங்கி திவால் ஆனதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலை எப்போது சீராகும், மீண்டும் தங்கம் விலை குறையும் என்பது கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.