
பழனியில் 24 அடி வேல் சிலை அகற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி…!
திண்டுக்கல்: பழனி சங்கமம் தூய்மைப் பணி மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சங்கம ஆரத்தி நிகழ்ச்சிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதேபோல், தைப்பூசத்தின் போது, 24 அடி உயர பித்தளை வேல் சிலை அங்கு வைக்கப்பட்டு, திருவிழா முடிந்ததும் அகற்றப்படும்.
அந்த வகையில் ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு சிலை வைக்கப்பட்டது. வரும் 7ம் தேதி தைப்பூச திருவிழா முடிந்ததும் சிலை அகற்றப்படும் என பக்தர்கள் தெரிவித்தனர். பூஜைகள் வழக்கம்போல் பிரச்னையின்றி நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று மாலைக்குள் வேல் சிலையை அகற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் காலையில் சிலை அகற்றப்படும் என்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து இன்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேல்சிலை அகற்றப்பட்டது. ஜே.சி.பி., கிரண் உதவியுடன் சிலையின் பீடத்தை இடித்து சிலையை பிரித்து லாரியில் ஏற்றிச் சென்றனர் காவல் துறையினர். வழிபாட்டிற்காக நிறுவப்பட்ட வேல் சிலை திடீரென அகற்றப்பட்டதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.