
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து வெற்றி… ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட் வீழ்த்தி அபாரம்
தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவு நடந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் சதம் அடித்தனர். மாலன் 114 பந்துகளில் 118 ரன்களும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்துகளில் 16 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 131 ரன்களும், மொயீன் அலி 23 பந்துகளில் 41 ரன்களும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 43 ஓவர்களில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்திருந்தது. இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது. ஹென்ரிச் கிளாசன் 62 பந்துகளில் 80 ரன்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்களும், 6 பவுண்டரிகளும் எடுத்தனர். ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்துவீசி 68 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடில் ரஷூத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாப்பிரிக்கா 2-1 என கைப்பற்றியது.