
காபியில் பால் சேர்ப்பது நல்லதா?
நம்மில் பெரும்பாலோர் எழுந்தவுடன் ஒரு கோப்பை சூடான காபி அல்லது டீயுடன் நம் நாளைத் தொடங்குகிறோம். ஆனால், காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பது நல்லதல்ல என்று அனைத்து சுகாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்/தண்ணீர் குடித்து நாளை தொடங்குவது நல்லது. சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிப்பது நல்லது. நாம் அடிக்கடி டீ, காபி குடிப்போம். பெரும்பாலான மக்கள் காபி மற்றும் டீயை நம்பியிருக்கிறார்கள், முக்கியமாக வேலையின் போது ஏற்படும் அலுப்பைப் போக்க, ஆற்றலைப் பெற அல்லது தூக்கத்தை சமாளிக்க. காபி இதற்கெல்லாம் மிகவும் பொருத்தமானது.
ஆனால் பால் இல்லாமல் காபி குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல என்று வாதிடும் பலர் உள்ளனர். பால் – ஒவ்வாமை உள்ளவர்கள், கண்டிப்பாக பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதற்கிடையில், இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாதவர்களுக்கு காபியில் பால் சேர்ப்பது நன்மை பயக்கும் என்று ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்த சுவாரஸ்யமான, உணவு தொடர்பான ஆய்வை டென்மார்க்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியது. இதுபற்றிய விவரங்கள் வேளாண்மை மற்றும் உணவு வேதியியல் இதழில் வந்துள்ளன.
காபியில் சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. காபியில் உள்ள ‘பாலிஃபீனால்’ என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு, பல உடல்நலப் பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. இது பல வழிகளில் உடலை மேம்படுத்தவும் மிகவும் உதவியாக உள்ளது.
பாலில் புரதம், கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்திருக்கும் போது, அது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று ஆய்வு விளக்குகிறது.