
இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் திரையரங்கம்… நடிகர்கள் திறந்து வைப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், சினிமா, ஓட்டல்கள் மற்றும் கடைகள் கொண்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில், 2,100 கார்கள் நிறுத்தும் திறன் கொண்ட மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தது. அதைதொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து காத்து இருக்கும் பயணிகள், சென்னை வந்து மாற்று விமானத்துக்காக அதிக நேரம் காத்து இருக்கும் பயணிகள், வெளிநாடுகளில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்க வந்து காத்திருப்பவர்களுக்காக 5 திரைகள் கொண்ட திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. இந்த தியேட்டரை நடிகர்கள் சதீஷ், ஆனந்தராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் புதிய திரையரங்கில் நடன நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் புதிதாக கட்டப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக திரையரங்கிற்கு செல்லலாம். 5 திரைகள் கொண்ட இந்தத் திரையரங்குகளில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து திரைப்படங்களைப் பார்க்கலாம். மேலும் உணவகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் விரைவில் திறக்கப்படும். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பொழுதுபோக்கிற்காக திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.