
ஆஸ்திரேலியா விசாவிற்கு சகோதரனை திருமணம் செய்த சகோதரி!
ஆஸ்திரேலியாவில் விசா பெறுவதற்காக இரு சகோதர சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று கனவு காணும் பலர் வெளிநாட்டு பெண்களை/ஆண்களை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டு குடியுரிமை பெறுவது சமீப காலமாக சர்வ சாதாரணமாகிவிட்டது.
ஆனால், மத்திய பிரதேசத்தில் இருந்து ஆஸ்திரேலிய குடிவரவு விசா பெற ஒரு சகோதரனும் சகோதரியும் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஒருவர் விசா பெற்று ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
ஆஸ்திரேலிய குடிவரவு சட்டங்களின்படி, தம்பதிகளில் ஒருவருக்கு ஆஸ்திரேலிய விசா இருந்தால், மற்றவர் எளிதாக விசா பெற முடியும். இதனால், தனது தங்கையை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட அண்ணன், பஞ்சாபில் உள்ள குருத்வாராவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
இதை அங்கு முறையாக பதிவு செய்து திருமண சான்றிதழ் பெறப்பட்டது. அதன் அடிப்படையில் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியா சென்றனர். இவர்களது ஆவணங்களை சமீபத்தில் ஆய்வு செய்ததில் இருவரும் சகோதர, சகோதரி என்பது தெரியவந்தது. இரு நாட்டு அரசாங்கங்களையும் ஏமாற்றி நாட்டிற்குள் பிரவேசிப்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக தேடியபோது, இவர்கள் ஆஸ்திரேலியாவில் தலைமறைவாகியிருந்தது தெரியவந்துள்ளது. தேடப்பட்டு வந்த நிலையில் விசா பெற அவர்கள் செய்த செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.