
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய டீன் பதவி ஏற்பு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீனாக பணியாற்றி வந்தவர் சுகந்தி ராஜகுமாரி. அவர் திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது மருத்துவத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்த பிரின்ஸ் பயஸ் பதவி உயர்வு பெற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய டீன் பிரின்ஸ் பயஸ் நேற்று பதவியேற்றார். அவரிடம் பழைய டீன் சுகந்தி ராஜகுமாரி பொறுப்பு பத்திரங்களை வழங்கினார். அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் அருள்பிரகாஷ் உடனிருந்தார். இதையடுத்து புதிய டீன் பிரின்ஸ் பயஸ் நிருபர்களிடம் கூறுகையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் செய்ய முடியாத அறுவை சிகிச்சை கூட இங்கு செய்யப்படுகிறது.இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துமனையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.