
ரணிலுக்கு எதிராக விமர்சனம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கையில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாகக் கூறி, நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்வதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி, தமிழ், சிங்கள மக்களை மீண்டும் குழப்பப் பார்கிறார்கள் எனவும் கூறினார் . தற்போது நாட்டில் இருக்கும் பிரதான பிரச்சினை எது? ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அரசாங்கமே சொல்லுகிறது. இத்தகைய நிலையில் விரைவாக தீர்க்க முடியாதவற்றைக்கூறி, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை அரசாங்கம் ஏற்ப்படுத்தி விட்டுள்ளது. நாட்டில் அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டம் 1988 ம், 1989 ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. இதுவரையில் 6,7 அதிபர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள்கூட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த முயலவில்லை.
ஏன் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட 6 முறை பிரதமராக இருந்திருக்கிறார். அப்போதுகூட ரணிலும் இதனை முயலவில்லை. ஆனால், இப்போது அதனை செய்ய முயல்கிறார். இதன் மூலமாக தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டப் பார்க்கிறார். 13 வது திருத்த விசயத்தில் ரணிலை எதிர்ப்பது யார்? அவரின் அரசாங்கத்துக்குள் உள்ளவர்களே ரணிலை எதிர்க்கிறார்கள். இந்த விசயத்தில் சர்வகட்சி மாநாட்டை அரசாங்கம் நடத்துவதற்கு முன்னர், அரசாங்கம் அனைவருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி ஓர் முடிவுக்கு வந்து அதனை அறிவித்திருக்கலாம் என்றிருக்கிறார் .