பட்டப்பகலில் நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவத்தைத்தொடர்ந்து இராணுவ ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் கைது

முக்கிய பிரதேசத்தில் 20 இலட்சம் ரூபா பணத்தை துணிகரமாக திருடிய இரண்டு சந்தேகநபர்களை துரத்திச் சென்ற பொலிசார் அவர்களை கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இலங்கை இராணுவ ஓட்டுனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. இந்த சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் தன்னை கடற்படை கேப்டன் என போலியாக அறிமுகப்படுத்தி 20 இலட்சம் ரூபாவை திருடி இருக்கின்றார் . ஒரு தொழிலதிபரிடம், புனேவ கடற்படை தளத்தில் கேள்வி கோரல் முறையில் டீசல் மற்றும் ஓயில் வழங்கப்படும் என்றும், 22 இலட்சம் மதிப்பிலான 20 பரல் டீசல் மற்றும் ஓயில் இன்று கேள்வி கோரல் முறையின்றி 20 இலட்சத்துக்கு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி சந்தேகநபர்களின் அறிவுறுத்தலின்படி இந்த வர்த்தகர் பணத்துடன் வாடகை லாரியில் புனேவ கடற்படை தளத்திற்கு அருகில் வந்துள்ளார். அங்கு முதலில் அவர்கள் அருகில் வந்த சந்தேகநபர்கள் முகாமிற்குள் செல்ல அனுமதி பெற்றுத்தருவதாக தெரிவித்து தொழிலதிபரின் அடையாள அட்டை மற்றும் லாரி ஓட்டுனரின் ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் போன்றவற்றை வாங்கி கடற்படை முகாமின் பிரதான வாயிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வந்து தொழிலதிபரிடம் அதற்கு அனுமதி உள்ளதாகவும் அதற்கான 20 இலட்சத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தெரிவித்து பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், பின்னால் லொறியை ஓட்டுமாறு கூறிவிட்டு திடீரென மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து , தொழிலதிபரும் அந்த லாரியில் அவர்களை துரத்தினார். அப்போது புனேவ நகரில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ரன்பண்டா மோட்டார் சைக்கிளை கவனித்து அதனை நிறுத்துமாறு சைகை செய்த போதும் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் உடனடியாக சந்தேக நபர்களை துரத்த ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உடனடியாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ரன்பண்டா, சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தொடர்பில் மதவாச்சியில் அதிவேக மோட்டார் சைக்கிள்களில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார். அதன்பிரகாரம் , மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டிய போதும் சந்தேகநபர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்று இக்கிரிகொல்ல பள்ளிக்கு அருகில் தப்பிச் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான உயர்மட்ட விசாரணைகளை மதவாச்சி மற்றும் புனேவ பொலிசார் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *