
சொகுசு காரில் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார் ; $5 மில்லியன் நஷ்டஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு
முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன் மீது துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 1990 களின் முற்பகுதியில் நியூயார்க்கின் அல்பானியில் உள்ள இரவு விடுதியில் தன்னைச் சந்தித்த பிறகு, சொகுசு காரில் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த வழக்கில் ஐந்து மில்லியன் டாலர் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் அந்த பெண் கோரியுள்ளார். பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டதாக அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் சம்பவம் நடந்த தேதி குறிப்பிடப்படவில்லை. அது 1990களின் தொடக்கத்தில் நடந்தது என்று மட்டும் சொல்லுகிறது. இந்த காலகட்டத்தில்தான், இண்டியானாபோலிஸில் டைசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அழகுப் போட்டியாளர் டிசைரி வாஷிங்டன் புகார் செய்தார். பிப்ரவரி 10, 1992 ல் வாஷிங்டனை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டைசன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் டைசன் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .