
கன்னட சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு … மார்ச் 17ல் ரிலீசாகும் கப்ஜா
கடந்த ஆண்டு பாலிவுட் படங்கள் தோல்விகளை சந்தித்து படுத்தே விட்ட நிலையில், தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கம் மேல் ஓங்கியிருந்தன . அதிலும், குறிப்பாக கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா உள்ளிட்ட படங்களால் ஒட்டுமொத்த திரையுலகின் பார்வையும் கன்னட திரையுலகம் மீது விழுந்தது. ஆஸ்கர் நாமினேஷன் வரை காந்தாரா போட்டியிடும் அளவுக்கு கன்னட திரையுலகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை கடந்த சில வருடங்களில் எட்டி உள்ளது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது . இந்நிலையில் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் நடிப்பில் கேஜிஎஃப் ஸ்டைலில் உருவாகி உள்ள ‘கப்ஜா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 17ம் தேதி வெளியாகிறது. கன்னட திரையுலகில் ‘அப்பு’ என செல்லமாக அழைக்கப்பட்ட மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17 ஆம் தேதியன்று, அவருக்கு ட்ரிப்யூட் செய்யும் விதமாக இந்த படம் ரிலீசாகவிருக்கிறது .