
நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல் யாத்திரையின் நோக்கம்… பரூக் அப்துல்லா பேட்டி
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி வைத்தார். பல்வேறு மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த பாதயாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ஜம்முவில் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் பல்வேறு தலைவர்களும் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா இன்று அனந்த்நாக் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், வெறுப்பு சுவரை உடைத்து நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல் காந்தியின் யாத்திரையின் நோக்கம். நம் முன்னோர்களின் கனவுக்காக அவர்கள் செய்த தியாகங்களுக்காக, அனைவரின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே இந்த யாத்திரையின் செய்தி. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டில் மக்கள் மத்தியில் வெறுப்பு பரப்பப்படுகிறது. இந்த நடைமுறை நாட்டையும் மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லாது. அது அழிவுக்கே வழிவகுக்கும். எனது சகோதரர்கள் (காஷ்மீர் பண்டிட்கள்) இந்த இடத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. நான் இறப்பதற்கு முன், அவர்கள் கண்ணியத்துடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பது என் ஆசை.’ என்று கூறினார்.