
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட அண்ணாமலை தயாரா? கே.எஸ்.அழகிரி சவால்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘அரசியலமைப்பை பாதுகாப்போம்’, ‘கையோடு கை கோர்ப்போம்’ என்ற பரப்புரை இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில்,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் மிகுந்த தைரியத்தோடு அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அவர் அ.தி.மு.க.வை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார். அவர் பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா.
தனியாக கூட நிற்க வேண்டாம். அ.திமு.க. கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா. தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர்.
நாம் தேர்தல் களத்தில் நமது வேட்பாளரை இறக்கி விட்டு உள்ளோம். ஆனால் அவர்கள் யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்கு உள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு பந்தை உதைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதுவரை அவர்கள் அந்த களத்திற்கு வரவில்லை என கூறியுள்ளார்