
ஷேர் ஆட்டோ- கார் மோதல்: 2 பேர் பலி
கல்பாக்கத்தில் இருந்து வாயலூர் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதில் கல்பாக்கம் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் (வயது.60), வாயலூர் பொம்ம ராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டு (59) உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருந்த போது சென்னை நோக்கி வந்த கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஷேர் ஆட்டோ பலத்த சேதம் அடைந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சேகர், பட்டு உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த 4 பேர் காயமின்றி தப்பினர். காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்து இருந்தது. இதுபற்றி அறிந்ததும் சதுரங்கபட்டிணம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர், பட்டு ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.