
முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும் பூண்டி ஏரி!
ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் முதல் தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கடந்த 30-ந் தேதி முழு கொள்ளளவான 3231 மி.கன.அடியை எட்டியது. பூண்டி ஏரியில் தண்ணீரை தொடர்ந்து தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கிருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளிலும் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் அங்கும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கையும் அனுப்பினர். ஆனால் தொடர்ந்து கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 703 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.