
‘பொங்கல் பரிசு தொகுப்பு’… திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வர்…!!!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். தமிழக மக்கள் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் 2 கோடியே 19 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ இனிப்பு அரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், பொங்கல் பரிசுடன் முழு கரும்பும் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொங்கல் பரிசாக 6 அடி நீளமுள்ள முழு கரும்பும் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 429 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. 33,000 ரேஷன் கடைகளுக்கும் பொங்கல் பரிசுப் பொட்டலங்கள் தடையின்றி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவிடம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 20 பேருக்கு 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ இனிப்பு அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்க உள்ளது.