பொங்கல் பரிசுத்தொகுப்பு… 100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது- ரேசன் கடை ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவுரை

பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம் தொடர்பாக ரேசன் கடை ஊழியர்களுக்கு அரசு முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது. அவை வருமாறு:-

நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பொங்கல் பொருட்களுக்கு என தனியே பெறப்பட்ட அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும். ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசி வினியோகம் செய்தல் கூடாது. பொங்கல் பண்டிகைக்காக புதிய சன்னரக அரிசி நகர்வு செய்யப்பட்ட அரிசி மட்டுமே பொங்கல் தொகுப்பிற்கு வழங்க வேண்டும். அனைத்து அரிசி மூட்டைகளையும் குத்தூசி மூலம் அரிசியின் தரத்தினை இன்றே சரிபார்க்க வேண்டும். பொருட்கள் வினியோகத்தின்போது குறை காணப்பட்டால் மாற்று அரிசி வழங்கிட இயலாத நிலை ஏற்படும். தரமான அரிசி வழங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும். 100 சதவீதம் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது. அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் புதிய பச்சரிசி வழங்கப்பட்டுள்ளதால் இதில் வண்டு, செல் பூச்சி எளிதில் பிற மூட்டைகளில் இருந்து இதற்கு பரவிவிட வாய்ப்பு உள்ளது. இதனை தனியே பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

பச்சரியில் பூச்சி எளிதில் உற்பத்தி ஆகிவிடும் என்பதால் இதனில் கவனம் தேவை என்பதை விற்பனையாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகபூச்சி, வண்டுகள் காணப்படும் பச்சரிசியினை உடன் மாற்றம் செய்து தரமான அரிசி வினியோகம் செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். சர்க்கரை வினியோகம் தொடர்பில் இதற்கென தனியே பெறப்பட்ட சர்க்கரை மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்க வேண்டும். தூய்மையான வெண்மை நிறம் கொண்ட சர்க்கரை 100 சதவீதம் அனைத்து கடைகளுக்கும் நகர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை மட்டுமே பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு பயன்படுத்திட வேண்டும். சர்க்கரையின் தரமும் உறுதி செய்துகொள்ள வேண்டும். பழுப்பு நிற சர்க்கரை, மாவு போன்ற சர்க்கரை போன்றவற்றை வினியோகம் செய்தல் கூடாது.

நியாய விலை கடைகளுக்கு 100 சதவீதம் கரும்பு நகர்வு செய்திட வேண்டும். எண்ணிக்கையில் குறைவு இருக்க கூடாது. அதிகமாக இருக்கலாம். ஆனால் குறைவு கண்டிப்பாக இருக்க கூடாது. கரும்பின் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது. 6 அடி அல்லது 6 அடிக்கு மேல் உள்ள கரும்பு மட்டுமே பொதுமக்களுக்கு வினியோகம் செய்திட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் 6 அடிக்கு குறைவான கரும்புகளை வினியோகம் செய்யக்கூடாது. அதனை தனியே பிரித்து வைத்துவிட வேண்டும். இதனை வினியோகம் செய்யக்கூடாது. மேலும் இது பொதுமக்களின் பார்வைக்குபடும்படி வைத்து தேவையில்லா பிரச்சினைகளுக்கு வழிவகுக்க கூடாது. நோயுள்ள செல்லரித்த பிடித்த, கோந்தாளை கரும்புகள் வினியோகம் செய்யக்கூடாது. கரும்பு சோகையுடன் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மொத்த உயரம் 10 அடி அல்லது அதற்கு மேல் இருக்கக்கூடும். மின்கம்பங்கள் அருகில் உள்ள நியாய விலைக்கடைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவாரம் வரையிலும் கரும்பு இருப்பில் உள்ள நிலை உள்ளதால் கரும்பு சோகைகள் காய்ந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை ஈர சாக்கு போர்த்தி தினமும் தண்ணீர் தெளித்து பாதுகாப்பு செய்திட வேண்டும்.

ரூ.1000 ரொக்கத்தையும் உரிய நபர்களிடம் மட்டுமே வழங்க வேண்டும். இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும் சில்லரை மாற்றித்தர கூடாது. அனைவரும் பார்க்கும்படி கையில் தரவேண்டும். கவரில் வைத்து தரக் கூடாது. 9-ந்தேதி முதல் 12-ந் தேதி ஆகிய தேதிகளுக்குள் முழுமையாக வினியோகம் செய்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், மூத்த குடிமக்கள், உடல்முடியாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்ய வேண்டும். தினமும் 200 முதல் 350 வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க டோக்கன் வினியோகம் செய்யபட்டிருக்கும் நிலையில் மாற்றுத்தேதி டோக்கன் கொண்டு எவரேனும் வந்தால் அவருக்கு இல்லை என்று சொல்லாமல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் மற்றும் ரொக்கம் வினியோகம் செய்ய வேண்டும். வேறு தேதிக்கு வா என்று சொல்லக்கூடாது. குடும்ப அட்டைதாரர்களுடன் அன்புடன் கனிவுடன் பேச வேண்டும். எந்தவித வாக்கு வாதமும் செய்யக்கூடாது. பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் மற்றும் கரும்பு நல்லமுறையில் மக்களுக்கு சென்றடைவதை கட்டாயம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *