
பறவைக் காய்ச்சலை தடுக்க கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு..!!
திருவனந்தபுரம் மாவட்டம் ஆவூர் அருகே பெருமாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி மற்றும் வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழிகள் மற்றும் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து கிடந்தன. இதையடுத்து, அவர்களின் ரத்த மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் தடுப்பு குறித்து திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெரோம் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பறவை காய்ச்சல் பரவியுள்ள பண்ணையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கோழிகள், வாத்துகள் மற்றும் அனைத்து பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 2 ஆயிரம் பறவைகளை அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கி.மீ., பகுதியில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.