
செங்கல்பட்டு தொகுதியில் சசிகலா சுற்றுப்பயணம்!
செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சசிகலா இன்று ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். செங்கல்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கொளப்பாக்கத்தில் இருந்து இன்று மாலை சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம், திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களுக்கு செல்லும் அவர் தனது ஆதரவாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பேசுகிறார். இதற்காக இன்று மாலை தி.நகரில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்படும் சசிகலா, கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் வழியாக கொளப்பாக்கத்தை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். சசிகலாவின் சுற்றுப்பயணத்தையொட்டி வழி நெடுக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளர்கள் செய்துள்ளனர். சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.