‘சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான்’… 20,000 பேர் பங்கேற்பு…!!!

சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் சென்னையில் நேற்று நடந்தது. முழு மராத்தான் (42.195 கி.மீ.), ‘பெர்பெக்ட்’ மராத்தான் (32.186 கி.மீ.), ஹாஃப் மராத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் ஆகிய 4 பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடைபெற்றது. பெசன்ட் நகர் அல்கார்டு பள்ளி அருகே காலை 5 மணிக்கு தொடங்கிய அரை மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரை

மாரத்தான் போட்டியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஓடினார். முன்னதாக, சென்னை, நேப்பியர் பாலத்தில், அதிகாலை, 4 மணிக்கு துவங்கிய முழு மாரத்தான் மற்றும் ‘பெர்ஃபெக்ட்’ மாரத்தான் ஓட்டத்தை, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தொடங்கி வைத்தார். நேப்பியர் பாலம் மற்றும் பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்ட மாரத்தான் காமராஜ் சாலை, சந்தோம் நெடுஞ்சாலை, சர்தார் படேல் சாலை, ஓ.எம்.ஆர். சாலை, இ.சி.ஆர். சாலை வழியாக கடல்சார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் முடிக்கப்பட்டது. நேப்பியர் பாலம் முதல் தரமணி வரை 10 கி.மீ ஓட்டம் மட்டுமே நடைபெற்றது.

சென்னையில் 4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் மொத்தம் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆடவருக்கான ஃபுல் மாரத்தான் போட்டியில் கோவையைச் சேர்ந்த வினோத்குமார் முதல் பரிசாக ரூ.1 லட்சம் பெற்றார். 2வது பரிசை கேயன் பாபுவும், 3வது பரிசை ஜெகதீசன் முனுசாமியும் பெற்றனர். பெண்கள் பிரிவில் கென்யாவை சேர்ந்த பிரிஜிட் ஜெரண்ட் கிமிட்வாய் முதல் பரிசான ரூ.1 லட்சத்தை தட்டிச் சென்றார். 2வது பரிசை சந்தியா சங்கரும், 3வது பரிசை மம்தா ராவத்தும் பெற்றனர். ஆண்களுக்கான ‘பெர்பெக்ட்’ மாரத்தான் போட்டியில் ஜி.ஜோஸ் முதலிடம் பிடித்தார். அவருக்கு பரிசாக ரூ.70 ஆயிரம் கிடைத்தது. 2வது இடத்தை வெங்கடேஷ் பழனிசாமியும், 3வது இடத்தை சுபம் தீட்ஷியும் பெற்றனர். பெண்கள் பிரிவில் டிம் டிம் ஷர்மா முதல் பரிசாக ரூ.70 ஆயிரம் பெற்றார். 2வது பரிசை வினயா மாலுசரேயும், 3வது பரிசை ரமா ரஞ்சனியும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *