
கொல்கத்தாவில் ஜி-20 மாநாடு… பாரம்பரிய முறைப்படி வெளிநாட்டு குழுவினருக்கு பிரமாண்ட வரவேற்பு
இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த 2022 நவம்பரில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றது.இதையடுத்து, ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இதுபற்றி பேசிய பிரதமர் மோடி, “நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், ‘ஜி-20’ அமைப்பை வழிநடத்துவது பெருமையாக உள்ளது. இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜி-20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியது.இதையடுத்து இந்தியாவில் ஜி-20 தலைமைக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.நாட்டின் பல்வேறு நகரங்களில் மாநாட்டு கூட்டங்கள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து , மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் ஜி-20 மாநாடு முதன்முறையாக நடைபெற உள்ளது.இதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு அணி ஒன்று இன்று நகருக்கு வருகிறது. அவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாநாட்டிற்கு செல்லும் வழியெங்கும் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.கொல்கத்தாவில் இன்று முதல் 11ம் தேதி வரை 3 நாட்கள் மாநாடு நடக்கிறது.