
கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டார்- திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளிம்புநிலை கூறுகளாக செயல்பட்டன. அற்ப அரசியல் லாபங்களுக்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையை இடையூறு செய்ததன் மூலம் சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே, திமுக கூட்டணிக் கட்சிகள் போராடத் தயாராகிவிட்டனர். சூழல் உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது, தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. ஆளுநர் கருத்துக்களை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் உரையை சட்டசபை குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது. கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது. ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது திமுக அரசு. திமுகவின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ? மக்கள் பணத்தை கோடி கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில், நடப்பது எல்லாமே நாடகமே என்று தெரிவித்துள்ளார்.