
ஆளுநர் உரையில் கூறப்பட்டது என்ன?
சட்டசபையில் ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது:-
சாதாரண நகர பஸ்களில் ‘மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லாப் பயணம்’ என்ற புரட்சிகரமான திட்டத்தின் மூலம், மாநிலத்தில் பெண்களிடையே பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி சமூக எழுச்சியும் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் 36 லட்சம் பயணிகள் பயணம் செய்து மகளிர் பயன் அடைந்து வரும் இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக மாதத்திற்கு ரூ.888 அளவிற்கு சேமிக்கின்றனர் என்று மாநில திட்டக் குழுவின் ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயிலில் 2022-ம் ஆண்டில் ஜூன் மாதத்தில் நாள் ஒன்றிற்கு 1.76 லட்சம் பயணிகள் என்று இருந்த எண்ணிக்கை டிசம்பர் மாதத்தில் 2.07 லட்சமாக உயர்ந்துள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. நீளமுள்ள சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்டப் பணிகள் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள தொல்பொருள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களின் செழுமையான மரபினைப் பாதுகாப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்றே, ஆதிச்சநல்லூர், கொள்கை, சிவகளை ஆகிய பகுதிகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மாநில முழுவதும் வீடு இன்றி வசித்து வரும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியினருக்கு 1,537 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் பெரும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1000-ல் இருந்த ரூ.1,500 ஆகவும், தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ள இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்த முதலமைச்சர் ஆணையிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு பதவி ஏற்றபின் 2021-ம் ஆண்டில் நம் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்தப் பேரிடரை எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில் சமீபத்தில் ஏற்பட்ட புயலையும், கன மழையையும் இந்த அரசு மிகச் சிறப்பாக கையாண்டது. கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்திருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களாலும், நலத்திட்டங்களா லும், வளர்ச்சிப் பணிகளாலும், இந்நிலை மாறி, தற்போது தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் முன்னேறி செல்கிறது. சட்டம்-ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து, அனைத்து துறைகளிலும், முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.