
ஆசிய கோப்பை கிரிக்கெட்… ஒரே பிரிவில் இடம்பெற்ற இந்தியா – பாகிஸ்தான்…!!!
ஆசியக் கோப்பையின் 16வது சீசன் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) அனுசரணையில் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால் அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எதிர்ப்பு தெரிவித்தது. இந்திய அணி வர மறுத்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை (50 ஓவர்) தொடரை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான (2023-24) அட்டவணையை ஏசிசி தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ளார். இதில், 2023ல் 75, 2024ல் 70 என மொத்தம் 145 ஒருநாள் மற்றும் ‘டி20’ போட்டிகள் நடைபெறவுள்ளன.
திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை நடைபெறும். ஆனால் போட்டி நடைபெறும் இடம் உறுதியாகவில்லை. இந்த ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ஆசிய கோப்பை 50 ஓவர் போட்டியாக நடத்தப்படும். மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும். 6 லீக், 6 ‘சூப்பர்-4’ மற்றும் ஒரு இறுதிப் போட்டி என 13 ஆட்டங்கள் நடைபெறும். லீக் சுற்றில் 6 அணிகள் 2 பிரிவுகளாக மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தகுதிச் சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.