
வாலிபருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). லாரி உரிமையாளர். இவர் கம்மார்பாளையம் கடை வீதியில் எம் சாண்ட், மற்றும் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் கம்மார்பாளையம் பஸ்நிறுத்தம் அருகே கண்ணன் நின்று கொண்டு இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் கண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாலுசெட்டிசத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை முயற்சியில் ஈடுபட்டது கோவிந்தவாடி பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரின் மகன் என்று தெரிகிறது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.