
வரும் 12-ம் தேதி துவங்கும் இந்தியா – ஜப்பான் கூட்டு விமான பயிற்சி..!!
இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகள் இணைந்து முதன்முறையாக ‘வீர் கார்டியன் 2023’ என்ற கூட்டுப் பயிற்சியை நடத்த உள்ளன. ஜப்பானில் உள்ள ஹைகுரி விமான தளத்தில் வரும் 12ம் தேதி துவங்கும் இந்த பயிற்சி 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்திய விமானப்படையின் 4 Su-20 MKI ஜெட் விமானங்களும், 2 C-17 விமானங்களும், IL-78 ரக விமானங்களும் ஜப்பானின் 4 F-2 மற்றும் 4 F-15 ரக போர் விமானங்களும் பங்கேற்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப்படுத்துவதற்கும், நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இது அடுத்த கட்டம் என்று இந்திய விமானப்படை கூறுகிறது. இந்த பயிற்சியில், இரு தரப்பு நிபுணர்களும் பல்வேறு அம்சங்களில் தங்கள் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள ஆலோசனை நடத்துவார்கள். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பாதுகாப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த விமானப்படை பயிற்சி நடைபெற உள்ளது.