புதிய திட்ட சாலைக்கு டாக்டர் நா.மகாலிங்கம் பெயர் சூட்டப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொங்குநாடு அறக்கட்டளையின் சார்பில் பொள்ளாச்சி மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. 100 ஆண்டுகள் கழித்தும் அவரை நினைக்கிறோம், வாழ்த்துகிறோம், போற்றுகிறோம் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் ஆற்றிய பணிகளுக்காக நமது நன்றியின் அடையாளமாகவே இதனை நாம் செய்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் தொழில் துறையாக இருந்தாலும், ஆன்மிகத்துறையாக இருந்தாலும், அரசியல் துறையாக இருந்தாலும், இலக்கியத் துறையாக இருந்தாலும், கல்வித் துறையாக இருந்தாலும், சமூக சேவையாக இருந்தாலும், பதிப்புத் துறையாக இருந்தாலும், அனைத்திலும் முத்திரை பதித்த பல்துறை ஆற்றலாளர்தான் நம்முடைய பொள்ளாச்சி மகாலிங்கம். 1952 முதல் 1967 வரை மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வகித்தார். இங்கு ஒரு கோரிக்கையை என்னிடத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில் பொள்ளாச்சியில் உள்ள கோவை சாலை மற்றும் பல்லடம் சாலையை இணைக்கும் புதிய திட்ட சாலைக்கு “டாக்டர் நா.மகாலிங்கம்” பெயர் சூட்டப்படும் என்பதை பெருமகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *