
சென்னையில் பனிமூட்டம் அதிகரிப்பு
சென்னையில் எழும்பூர், சென்ட்ரல்,வேப்பேரி, பெரம்பூர், மயிலாப்பூர், மெரினா கடற்கரை, கோயம்பேடு, அண்ணா நகர், வடபழனி, கிண்டி, அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் கடும் குளிர், பனி மூட்டம் நிலவி வருகிறது. கடந்த 4 தினங்களாக சென்னையில் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தற்போது சென்னை குளிர்பிரதேசமாக மாறி உள்ளது. சென்னையில் அதிகாலையில் பல்வேறு சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்தது. மேலும் சூரியன் உதயமாகியும் வானில் வெளிச்சம் தெரியாமல் சூரியன் பகல் நிலவு போன்று காட்சி அளித்தது. இதனால் சாலையில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றனர். பனி மூட்டத்தால் சென்னை மாநகரில் உள்ள சாலைகள், முக்கிய கட்டிடங்கள், வீடுகளில் பனி மூட்டம் சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்தது.