
சீனாவின் கோவிட் சூழ்நிலை குறித்து அச்சம் தேவையில்லை ; ஆதார் பூனாவாலா
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறுகையில், சீனாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து கவலைப்பட தேவையில்லை. இந்தியாவில் நோயறிதல் மற்றும் தடுப்பூசிகள் திறமையானவை என்றும் அதனால் அச்சப்படத் தேவையில்லை என்றும் பூனாவாலா கூறினார்.
“இந்தியாவில் தடுப்பூசி மற்றும் நோயறிதல் திறமையாக இருப்பதால் சீனாவில் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. இந்த சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் பூனாவாலா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தற்போது சீனாவில் ஒவ்வொரு நாளும் 2,000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுவதாக ஹாங்காங் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஆனால் தினசரி கோவிட் பாதிப்பு இதை விட அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழ்நிலையில் சீனாவில் 60 சதவீத மக்களும், உலகில் 10 சதவீத மக்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு பலர் இறக்க நேரிடலாம் என சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதரக பிரதிநிதி கே.பி.பேபியன் தெரிவித்துள்ளார்.