
சுவேந்து அதிகாரியின் நிகழ்ச்சியில் நெரிசல் : 3 பேர் பரிதாப மரணம்
மேற்கு வங்காளத்தின் மேற்கு பர்த்வான் மாவட்டம் அசன்சோல் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி, மற்றொரு முக்கிய தலைவரான ஜிதேந்திர திவாரி உள்ளிட்டோர் பங்கேற்ற ஏராளமானோர் கலந்துகொண்டு போர்வை பெற்றுச் சென்றனர்.
இந்த கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்ட நிலையில் நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். நெரிசல் ஏற்பட்டதையடுத்து சுவேந்து அதிகாரி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார். நெரிசலில் சிக்கி சந்த்மணி தேபி(55), ஜிகாலி பவுரி (60), பிரித்தி சிங் (12) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
அசன்சோல் 27வது வார்டு கவுன்சிலராக உள்ள பாஜக தலைவர் சைதாலி திவாரி, மத அமைப்பின் கீழ் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். காவல்துறையிடம் அனுமதி பெறாமல் பாஜக இந்நிகழ்ச்சியை நடத்தியதாக திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.