
கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
டாக்டர் எம்.குமரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை அளித்து, அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சை பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள். இந்த சிகிச்சை முறையை அவர் 2 பேருக்கு சொல்லி கொடுத்து இருப்பதாக கூறினார்.
அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும். டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும். கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து விரைவில் முதலமைச்சரிடம் தெரிவித்து, தமிழக மருத்துவ துறையில் சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்படும். டாக்டர் குமரேசன் மூலம் ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தார்.