
2024 மக்களவைத் தேர்தல்..அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி..!!
2024 மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று பிரயாக்ராஜ் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் வெற்றி பெற்றுள்ளனர். அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். தற்போது வயநாடு தொகுதியின் எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என பிரயாக்ராஜ் வட்டார காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நேரு குடும்பத்துக்கும் அமேதிக்கும் பழைய தொடர்பு உள்ளது. அதை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. வரும் 2024 மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லிக்கு எம்.பி.யாக அனுப்ப வேண்டும். தற்போது ராஜஸ்தானில் பாரத் ஜோதா யாத்திரை நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் நுழையும். கடைக்காரர்கள் தங்கள் கடைகளை விட்டு வெளியேறுகிறார்கள். ஜிஎஸ்டி வரி குறித்து வியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்த வியாபாரிகள் தற்போது துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.