
ரெயிலில் 8 கிலோ குட்கா பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று மாலை ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அந்த ரெயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறையின் அருகே கிடந்த சோல்டர் பேக் பையில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் குட்கா பொருள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.