
நடப்பு ஆண்டில் 5-வது மறையாக நிரம்பியது பவானி சாகர் அணை
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாலும் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடிக்கு மேல் சென்றதால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பவானிசாகர் அணை வரலாற்றில் 28-வது முறையாக 104 அடியை எட்டி உள்ளது. இந்த ஆண்டில் 5-வது முறையாக பவானிசாகர் அணை 104 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104. 67 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,549 கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு உபரிநீராக 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.